

புதுடெல்லி
தேசியக் குற்றப்பதிவேடு கழகத்தின் தரவுகளின் படி 2017-ல் மட்டும் கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 2016-ஐ காட்டிலும் இரட்டிப்பாகியுள்ளது.
அதாவது 2017-ல் ரூ.28.1 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன. 2016-ல் இதன் மதிப்பு ரூ. 15.1 கோடி.
‘இந்தியாவில் குற்றம்’- 2017’ அறிக்கையின் படி 2017-ல் கைப்பற்றப் பட்ட மொத்த கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 3.55 லட்சம். 2016-ல் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 2.81 லட்சம் ஆகும்.
என்.சி.ஆர்.பி அறிக்கையின் இந்தப் பகுதி பற்றிய விவரங்களில் மாநில வாரிய புள்ளி விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன, அதன் படி குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக ரூ.9 கோடி கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன. டெல்லியில் ரூ.6.7 கோடி, உத்தரப்பிரதேசம் ரூ 2.8 கோடி,மேற்கு வங்கம் ரூ.1.9 கோடி.
பணமதிப்பு நீக்கம் 2016-ல் அறிவிக்கப்பட்ட போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதன் ஒரு காரணமாக கள்ள நோட்டுகளைக் குறைப்பதும் நோக்கம் என்று பாஜகவினரால் கூறப்பட்டது. இதனையடுத்து ரூ.2000 புதிய தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனால் என்.சி.ஆர்.பி தரவுகளின் படி 2017-ல் மட்டும் கைப்பற்றப்பட்ட கள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை மட்டும் 74,998 ஆகும். 2019-ம் ஆண்டில் வங்கிகளினால் கண்டுபிடிக்கப்பட்ட போலி ரூ.2000 தாள்களின் எண்ணிக்கை மட்டும் 21,847 ஆகும்.