Published : 25 Oct 2019 11:37 AM
Last Updated : 25 Oct 2019 11:37 AM

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிட மேலும் 4 வார அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு

ஆர்.பாலசரவணக்குமார்

புதுடெல்லி 

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல்கள் காரணமாக, ஏற்கெனவே உத்தரவாதம் அளித்தபடி அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட முடியவில்லை. எனவே, டிசம்பர் முதல் வாரம் அறிவிப்பாணை வெளியிடும் வகையில் மேலும் 4 வாரம் அவகாசம் தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.

‘தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடக்கவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கி உள்ளன. எனவே, இனியும் தாமதம் செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இந்த வழக்கு ஏற்கெனவே கடந்த ஜூலை 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வார்டு மறுவரையறை, வாக்காளர்பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிட அக்டோபர் 31-ம் தேதி வரை அவகாசம் தேவை’ என்று மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் வெளியிட்டு, குறித்த காலத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட மேலும் 4 வாரம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமி மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, குறித்த காலத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு பாரத் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு முதல்கட்ட பரிசோதனை நடத்தவேண்டி உள்ளது. ஆனால் மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் காரணமாக இப்பணியை நவம்பர் 3-வது வாரத்தில்தான் முடிக்க முடியும் என்று அந்த நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

எனவே, ஏற்கெனவே உத்தரவாதம் அளித்தபடி அக்டோபர் 31-ம்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட இயலாத அளவுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளது.

எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட மேலும் 4 வாரம் அவகாசம் தேவை.

டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x