Published : 25 Oct 2019 08:45 AM
Last Updated : 25 Oct 2019 08:45 AM

பயன்பாட்டுக்கு வருகிறது கர்தார்பூர் வழித்தடம்: இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே நேற்று கையெழுத்தானது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.

இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. இந்தியாவில் இந்தக் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானில் இவ்வழித்தடம் அமைக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், இந்த கர்தார்பூர் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்தியத் தரப்பில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் தாஸ் தலைமையிலான உயர்நிலைக் குழுவும், பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தலைமையிலான உயர்நிலைக் குழுவும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.

இதன் தொடர்ச்சியாக, கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களால் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே, கர்தார்பூர் வழித்தடத்துக்கு செல்ல இந்திய யாத்ரீகர்களிடமிருந்து தலா 20 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,419) வசூலிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதற்கு இந்தியத் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டபோதிலும், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இத்திட்டத்தால், பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் ரூ.255 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த மாதம் 9-ம் தேதி திறந்து வைக்கிறார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x