

கலபுராகி, ஏ.என்.ஐ.
தள்ளாத வயதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 91 வயது விவசாயி ஒருவர் தினமும் 8மணி நேரம் வயலில் இறங்கி வேலை செய்துவருகிறார்.
ஒருபுறம் இன்றைய இளம் தலைமுறை சுலபமான வேலையை நம்புகிறது, மறுபுறம் தனது வயதான காலத்திலும் சில பெரியவர்கள் உழைத்து வருகிறார்கள்.
கர்நாடகா கலபுராகி அருகில் உள்ள ஒரு கிராமத்து விவசாயி, பசவணப்ப பாட்டீல் தனது 91 வயதில்கூட ஒவ்வொருநாளும் தன்னுடைய புதிய இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு வேலையை தொடங்குகிறார். தனது பண்ணையில் இன்னும்கூட அவர் மணிக்கணக்கில் வேலை செய்து வருகிறார்.
தினமும் வயலில் 8 மணிநேரம் வேலை செய்வது குறித்து பசவனப்ப பாட்டீல் கூறியதாவது:
இது எனக்கு பிடித்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தினந்தோறும் காலை 10 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வேலை செய்கிறேன். இந்த வயதிலும் நான் வேலை செய்வதற்கு ஒரே காரணம்தான். எளிமையான வாழ்க்கை. எனது உணவு ரொட்டி, தயிர், பால் இவை மட்டும்தான்.
இதுவரையிலும்கூட நோய் எதுவும் வந்ததில்லை. எனக்கு ஆறு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் யாரும் விவசாயத்தில் ஈடுபடவில்லை.
இளைஞர்களுக்கு நான் ஏதாவது சொல்லவேண்டுமென்று கேட்கிறீர்கள்... அவர்கள் கேட்க மாட்டார்கள்.
இவ்வாறு புன்னகையோடு பாட்டீல் தெரிவித்தார்.