

ஆறு நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று உஸ்பெகிஸ்தானுக்கு சென்ற டைந்தார். தலைநகர் தாஷ்கண்ட் விமான நிலையத்தில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் சவ்கட் மிரோனோவிக் மிர்ஸியோயி அமைச்சர்கள் பலருடன் நேரில் வந்து மோடியை வரவேற்றார்.
ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் 8 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அதிபர் மாளிகையில் உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமுவ், மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளித்தார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து அவருடன் மோடி பேச்சு நடத்தினார். பிரதமர் மிரோனோவிக்குடனும் மோடி பேச்சு நடத்தினார். தொடர்ந்து தாஷ்கண்ட்டில் வசிக்கும் சுமார் 3 ஆயிரம் இந்திய வம்சாவளியினரை அவர் சந்தித்து உரையாடினார்.
ட்விட்டரில் பதிவு
தாஷ்கண்ட் வந்து இறங்கிய உடன் ஆங்கிலம் மற்றும் உஸ்பெக் மொழியில் மோடியின் ட்விட்டர் பதிவுகள் வெளி யாகின.
அதில், “ஹலோ உஸ்பெகிஸ் தான். பிரதமர் மிரோனோவிக் மற்றும் அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். எனது இனிய பயணம் இங்கிருந்து தொடங்குகிறது” என்று மோடி தெரிவித்துள்ளார்.
இன்று கஜகஸ்தான் செல்லும் மோடி நாளை ரஷ்யா சென்றடைகிறார். அங்கு இந்தியா-ரஷ்யா இடையே பொருளாதாரம் அரசியல் மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சு நடத்துகிறார்.
நாளை முதல் 3 நாட்கள் (ஜூன் 7 முதல் 10 வரை) நடைபெறும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ) மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இம்மாநாடுகளில் வர்த்தகம், தீவிரவாத பிரச்சினை மற்றும் யோகாசனம் குறித்து மோடி பேசுவார் என்று தெரிகிறது.
நவாஸுடன் சந்திப்பு
ரஷ்யாவின் உஃபா நகரில் எஸ்.சி.ஓ மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் பங்கேற்கிறார். இதில் இருவரும் சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரம்ஜான் நோன்பு தொடங்கிய போது நவாஸ் ஷெரிப்புக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். எனவே அடுத்த கட்டமாக இரு தலைவர்களும் பேச்சு நடத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரி கிறது.
யுரேனிய கோரிக்கை
10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை துர்க்மினிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொள்கிறார். மத்திய ஆசிய நாட்டுத் தலைவர்களுடன் மோடி நடத்தும் பேச்சுகளில் அந்நாடுகளில் இருந்து இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், யுரேனியம் பெறுவது முக்கியமாக இடம்பெறும்.
1955-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு சென்றதற்கு பிறகு, மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான்.
வெளிநாட்டு பயணங்கள்
பிரதமர் மோடி வெளிநாடு களுக்கு செல்லும்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக கருத்துகள் காட்டுத்தீயாக பரவுகின்றன.
ஆனால் இப்பயணங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு அனைத்து ரீதியிலும் வெகுவாக பயனளிக்கும், பல நாடுகளுடன் நட்புறவு வலுப்படும் என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் கூறப்படுகிறது. கடைசியாக மோடி சீனா, தென்கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார். இப்போது சுமார் ஒன்றரை மாத இடைவேளைக்குள் மீண்டும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.