Published : 24 Oct 2019 03:07 PM
Last Updated : 24 Oct 2019 03:07 PM

''காஷ்மீரில் இன்னும் எத்தனை நாளைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க விரும்புகிறீர்கள்?'' - உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி,

காஷ்மீரில் இன்னும் எத்தனை நாளைக்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்? இதைப் பற்றி அவ்வப்போது ஆய்வு செய்தீர்களா? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரணை செய்தது.

விசாரணையின்போது நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இணையம் தடை விதிக்கப்படுவது குறித்து கேள்விகளை எழுப்பியது.

அதற்கு பதில் அளித்த மாநில நிர்வாகத்தின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''காஷ்மீர் நிர்வாகம் தினசரி அடிப்படையில் கட்டுப்பாடுகளை மறு ஆய்வு செய்து வருகிறது. சுமார் 99 சதவீதப் பகுதியில், எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை'' என்று தெரிவித்தார்.

அப்போது மனுதாரர்களில் ஒருவரின் வழக்கறிஞர், ''போஸ்ட்பெய்ட் செல்போன்கள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகள் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளன'' என்று கூறினார்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''இந்தப் பிரச்சினையில் எல்லை தாண்டிய தாக்கங்கள் உள்ளதால் இணையத்தில் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கூறியதாவது:

''பள்ளத்தாக்கில் செல்போன் சேவைகள் மீட்டெடுக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்னும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இன்னும் எத்தனை நாட்கள் கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புகிறீர்கள்? இப்போது ஏற்கெனவே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

இதுகுறித்து மத்திய அரசு தெளிவாக ஒரு முடிவுக்கு வர வேண்டும், மற்ற முறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும். மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால் அவ்வப்போது அந்த முடிவு குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

இணையக் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், மக்களுக்கு ஏதாவது ஒரு தொடர்பு முறையை ஏற்படுத்த வேண்டும்’’.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த மனுக்கள் மீதான வாதங்களை மீண்டும் நவம்பர் 5 ஆம் தேதி விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x