ஹரியாணா தேர்தலில் பின்னடைவு எதிரொலி: பாஜக தலைவர் ராஜினாமா

சுபாஷ் பரலா - கோப்புப்படம்
சுபாஷ் பரலா - கோப்புப்படம்
Updated on
1 min read

சண்டிகர்

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில பாஜக தலைவர் சுபாஷ் பரலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஹரியாணாவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியாணா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

இந்த தொகுதிகளில் இறுதியாக 1,169 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சி யான அகாலி தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக 36 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

முதல்வர் மனோகர்லால் கட்டார் கர்னால் தொகுதியிலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜ் அம்பாலா கண்டோண்மென்ட் தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். மாநில அமைச்சர்கள் இருவர் தங்கள் தொகுதியில் பின் தங்கியுள்ளனர்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறியான நிலை ஏற்படும் சூழலில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க காங்கிரஸ் முயன்று வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் பதவியை துஷயந்த் சவுதாலாவுக்கு வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற முடியாத சூழல் நிலவும் நிலையில் மாநில தலைவர் சுபாஷ் பரலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in