

மைசூரு
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (39). இவரது தாய் 70 வயதான சூடாரத்னா. கிருஷ்ண குமார் தனது தாயை தன்னிடம் உள்ள பஜாஜ் சேடக் ஸ்கூட்டரிலேயே பல ஊர்களுக்கு புனித யாத்திரை அழைத்துச் செல்கிறார். இதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இதுவரை 48,100 கி.மீ. தூரம் பயணம் செய்து பல கோயில்களுக்கும் சென்றுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ண குமார் கூறுகையில், ‘‘கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் எனது தாய் வீட்டு வேலைகளை மட்டுமே செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். எனது தந்தை இறக்கும் வரை சமையலறைதான் என் தாயின் உலகம். கோயில்களுக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒரே மகனான நான் அவரது ஆசையை நிறைவேற்ற ஸ்கூட்டரில் புனித யாத்திரை அழைத்துச் செல்கிறேன்’’ என்றார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புனித யாத்திரை தொடங்கினார் கிருஷ்ண குமார். இதுவரை நாட்டின் பல மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்றுள்ளார்.
கிருஷ்ண குமாரின் தாய் பாசத்துக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன. கிருஷ்ண குமாரைப் பற்றி அறிந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கிருஷ்ண குமாரை பாராட்டி இருப்பதோடு, அவர் தனது தாயை அழைத்துச் செல்ல வசதியாக கார் பரிசளிக்க விரும்புவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.