Published : 24 Oct 2019 10:50 AM
Last Updated : 24 Oct 2019 10:50 AM

கோதுமை, பார்லி, பருப்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு

புதுடெல்லி

கோதுமை, பார்லி, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண் விளைபொருள் ஆலோ சனைக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப, 2019-20-ம் பயிர் ஆண்டில் ராபி பருவ அனைத்து விளைபொருட்களின் குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி கோதுமை மற்றும் பார்லிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவின்டாலுக்கு ரூ.85 உயர்த்தப்பட்டுள்ளது.

கோதுமையின் தற்போதைய கொள்முதல் விலை குவின்டால் ரூ.1,840 ஆக உள்ளது. இது ரூ.1,925 ஆக உயருகிறது. இது போல் பார்லியின் விலை ரூ.1,440-ல் ரூ.1,525 ஆக உயருகிறது. மசூர் பருப்பு விலை குவின்டாலுக்கு ரூ.325-ம், கடலை பருப்பு விலை ரூ.255-ம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி மசூர் பருப்பு விலை ரூ.4,475-ல் இருந்து ரூ.4,800 ஆகவும் கடலை பருப்பின் விலை ரூ.4620-ல் இருந்து ரூ.4,875 ஆகவும் உயருகிறது. இதுபோல் எண்ணெய் வித்துக்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லியில் அங்கீகரிக்கப் படாத குடியிருப்புகளில் வசிக்கும் 40 லட்சம் பேர் பயனடையும் வகை யில் அவர்களின் குடியிருப்பு களுக்கு அங்கீகாரம் வழங்கவும் மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி யில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முக்கிய முடிவை அரசு எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x