

மும்பை
தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட உதயன் ராஜே போஸ்லே பின்னடைவை சந்தித்து வருகிறார்.
மகாராஷ்டிராவில் சில மாதங்களுக்கு முன்பு கடந்த மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி.யாக தேர்வானவர் உதயன்ராஜே போஸ்லே.
மூன்றே மாதங்களில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். உதயன்ராஜே போஸ்லே மகாராஷ்டிராவில் சதாரா தொகுதி எம்.பி.யாக போஸ்லே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் குடும்பப் பரம்பரையில் வந்தவர் உதயன்ராஜே போஸ்லே.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடக்க நிலையில் பாஜக- சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.பிஹாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் சடாரா மக்களவைத் தொகுதியில் முதல்கட்ட நிலவரப்படி தேசியவாத காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட உதயன் ராஜனே போஸ்லே 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாச பாட்டீல் முன்னிலை வகித்து வருகிறார்.