

மும்பை
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடக்க நிலையில் பாஜக- சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 152, சிவசேனா 124, கூட்டணியை சேர்ந்த சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
காங்கிரஸ் 147, அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ் 262, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 101, மார்க்சிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் 16 தொகுதிகளில் போட்டியிட்டன.
ஆட்சியைப் பிடிக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் தீவிர முயற்சியை மேற்கொண்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக- சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக -சிவசேனா கூட்டணி 116 இடங்களிலும், காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.