Published : 24 Oct 2019 07:33 AM
Last Updated : 24 Oct 2019 07:33 AM

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51 பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன

புதுடெல்லி

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. காலை 11 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா, ஹரியாணாவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் இறுதியாக 235 பெண்கள் உட்பட 3,237 வேட் பாளர்கள் போட்டியிட்டனர். மகா ராஷ்டிரா தேர்தல் பணிக்காக 6.5 லட்சம் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீ ஸாரும், பாதுகாப்புப் படை வீரர் களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 152, சிவசேனா 124, கூட்டணியை சேர்ந்த சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் 147, அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ் 262, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 101, மார்க்சிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் 16 தொகுதிகளில் போட்டியிட்டன.

ஆட்சியைப் பிடிக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் தீவிர முயற்சியை மேற்கொண்டன.

அதேபோல், ஹரியாணா தேர் தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

இந்த தொகுதிகளில் இறுதியாக 1,169 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சி யான அகாலி தளமும் போட்டி யிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

இடைத்தேர்தல்

இதுதவிர 2 மக்களவை, 51 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

பிஹாரின் சமஸ்திபூர் மக்க ளவைத் தொகுதி, மகாராஷ்டி ராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும் உத்தரபிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதிகள், குஜ ராத்தில் 6, கேரளாவில் 5, பிஹாரில் 5, சிக்கிமில் 3, பஞ்சாப், அசாம் மாநிலங்களில் தலா 4, தமிழகம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2, ஒடிசா, தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மகாராஷ்டிராவில் 61.13 சதவீத வாக்குகளும், ஹரியாணாவில் 68.47 சதவீத வாக்குகளும் பதிவாயின.

வாக்குப்பதிவு முடிந்த நிலை யில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகா ரிகள் முன்னிலையில் உறையிட்டு சீல் வைக்கப்பட்டன. பின்னர் அவை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து வாக்கு எண் ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் களுடன் துணை ராணுவத் தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

வாக்கு எண்ணும் பணியில் சுமார் 25 ஆயிரம் தேர்தல் அதிகாரிகள் ஈடு படவுள்ளனர். காலை 11 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித் தனர். மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என கருத் துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x