

லக்னோ,
கொல்லப்பட்ட இந்து தலைவர் கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அறிவித்துள்ளார்.
கடந்த 18ஆம் தேதி இந்து சமாஜ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர். குண்டடிப்பட்டு ரத்தவெள்ளத்தில் விழுந்த கமலேஷ் திவாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்து சமாஜ் கட்சித் தலைவரின் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட மொய்னுதீன் மற்றும் அஷ்பாக் இருவரும் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் குற்றத்தில் ஈடுபட்டதற்காக அரை டஜன் நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கொல்லப்பட்ட இந்து தலைவர் கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ .15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது. மேலும் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்முதாபாத் வட்டத்தில் ஒரு வீடும் அவரது குடும்பத்திற்காக வழங்கப்படுகிறது.
உயிரிழந்த இந்து சமாஜ் கட்சியின் கமலேஷ் திவாரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதான வழக்கு விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும். திவாரி படுகொலைச் சதியில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டும்.
இவ்வாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐஏஎன்எஸ்