Published : 23 Oct 2019 03:57 PM
Last Updated : 23 Oct 2019 03:57 PM

சாலை விதி மீறல்: அபராதங்களை குறைத்தது கேரள அரசு; எவ்வளவு குறைப்பு?

திருவனந்தபுரம்

சாலை விதிகளை மீறுவோர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி விதிக்கப்பட்ட அபராதங்களை குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன.

ஒடிசா, ஹரியாணா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வாகன ஓட்டிகளிடம், 70 ஆயிரம், 80 ஆயிரம் என வசூலித்தனர். நாகாலாந்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு ஓவர் லோடு உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.2 லட்சம் வரை டெல்லி போலீஸார் அபராதம் விதித்தனர்.

11,000 ரூபாய் அபராதம் விதித்ததால் நொந்துபோன டெல்லியைச் சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தையே தீயிட்டு எரித்தார்.இதனால் அபராத தொகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த புதிய சட்டத்தை ஏற்க மறுத்தன. இதையடுத்து அபராத தொகை என்பது மாநில அரசுக்கு செல்வதால் அதனை தேவைப்பட்டால் மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அபராத தொகையை குறைத்து வருகின்றன.

இந்தநிலையில் கேரள மாநில அரசு அபராத தொகையை குறைத்துள்ளது. இதற்கான ஒப்புதலை அம்மாநில அமைச்சரவை வழங்கியுள்ளது. கனரக வாகனங்கள் அதிவேகமாக சென்றால் முதல்முறையாக விதிக்கப்படும் அபராதம் மோட்டர் வாகனச்சட்டத்தின்படி 2 ஆயிம் முதல் 4 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை 3 ஆயிரமாக கேரள அரசு நிர்ணயித்துள்ளது. மொபைல்போனுடன் வாகனம் ஓட்டுவோருக்கு மோட்டர் வாகனச்சட்டத்தின்படி ஆயிரம் ரூபாய் மதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதனை 2 ஆயிரமாக கேரள அரசு குறைத்துள்ளது.

அதுபோலவே ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் 4 கார் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை 1000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகை 10 ரூபாய் என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதுபோலவே சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் வண்டியின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையும் 10 ஆயிரம் ரூபாயாக இருக்கும் எனவும் அதனை குறைக்கத் தேவையில்லை எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x