

லக்னோ,
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 72 மணிநேரத்தில் மட்டும் சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க கருத்துகள் பதிவு செய்தது தொடர்பாக 32 பேர் மீது எஃப்.ஐ.ஆர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த 18-ம் தேதி இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி லக்னோவில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தினால் உ.பி.யில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பதிவுகள் வெளிவருகின்றன. கடந்த 72 மணிநேரத்தில் வெறுக்கத்தக்க பதிவுகள் செய்த 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஊடகக் கண்காணிப்புப் பிரிவில் இயங்கிவரும் அதிகாரி ஒருவர் கூறுகையில். "கமலேஷ் திவாரி படுகொலை, வரவிருக்கும் பண்டிகை காலம், தீவிரவாத அச்சுறுத்தல், உளவுத்துறை தகவல்கள் மற்றும் அயோத்தி வழக்கில் வரவிருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை சூழலைப் பாதிக்கும் வகையில் உள்ளன.
சமூக ஊடகங்கள் வெறுப்பைப் பரப்புவதற்கான ஒரு கொந்தளிப்பான தளமாக உருவெடுத்துள்ளன. அதில் வெறுப்பைப் பரப்பும் கருத்துகளைப் பதிவிடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
காவல்துறை இதுவரை எந்தவொரு குற்றவாளியையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பதிவு செய்யவில்லை எனினும், சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சினைகளுக்கு வழிவகுத்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது என்எஸ்ஏ சட்டத்தில் மீது வழக்குப் பதிவு செய்ய நாங்கள் தயங்கமாட்டோம்’’ எனத் தெரிவித்தார்.
178 பேரின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து காவல்துறை தலைவர் பிரவீன் குமார் கூறுகையில், ''கமலேஷ் திவாரி கொல்லப்பட்ட அக்டோபர் 18-ம் தேதிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பதிவுகள் வெளிவந்தன. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 32 பேர் கணக்குகள் மட்டுமின்றி, 178 பேரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கியுள்ளோம். டிஜிபி தலைமையகத்தில் உள்ள சமூக ஊடகக் கண்காணிப்புப் பிரிவு தொடர்ந்து சமூக ஊடகங்களில் கண்காணிப்பு செய்து வருகிறது'' என்று தெரிவித்தார்.