

புதுடெல்லி
அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ காவல் முடிந்த நிலையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள்.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வெளிநாடு செல்லத் தடை விதித்ததோடு, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
எனினும் அவர் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற புகாரில் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து உடனடியாக வெளியே வர முடியவில்லை. இதையடுத்து அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்றப் புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அக்டோபர் 24-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு டெல்லி நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து சிதம்பரத்தின் ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.