

அகர்தலா
திரிபுராவில் முந்தைய இடதுசாரி ஆட்சியில் பொதுப் பணித் துறையில் ரூ.630 கோடி ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக அத்துறையின் அமைச்சராக இருந்த பாதல் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பாதல் சவுத்ரிக்கு முன்ஜாமீன் வழங்க உள்ளூர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை மறுத்ததை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.
இந்நிலையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதல் சவுத்ரியை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பாதல் சவுத்ரியின் உடல்நிலை தேறிய பிறகு அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் பொதுப் பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் சுனில் பவுமிக் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தலைமைச் செயலாளர் யஷ்பால் சிங்குக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதல் சவுத்ரி அபாய கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.