

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
உ.பி.யின் அலகாபாத்தில் ‘தானியங்கள் வங்கி’ கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 70 கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கியில் கிராமப்புற ஏழைகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், உறுப்பினராக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. அவர்கள் அளிக்கும் விலாசத்தை சரிபார்த்து உறுப்பினராக சேர்க்கப்படுகின்றனர்.
பிறகு, இவர்களுக்கான அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை இந்த வங்கி கடனாகக் கொடுத்து வருகிறது. இதை அவர்கள் அடுத்த 15 நாட்களுக்குள் அதே எடையுடன் தானியமாக திருப்பிச் செலுத்தி விடலாம். இந்த வங்கியின் கிளைகள் யாராவது ஒரு நம்பிக்கைக்கு உரியவரின் வீட்டில் அல்லது அவர்கள் நிலத்தின் வெட்டவெளியில் செயல்படுகின்றன. இங்கு தகரத்தாலான ஒரு பெரிய பெட்டியில் தானியங்கள் மட்டும் மாலை நேரங்களில் வைக்கப்பட்டிருக்கும். இவற்றில் இருந்து கடனாகக் கேட்பவர்களுக்கு அதிகபட்சமாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு விநியோகிக்கப்படுகின்றன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தானிய வங்கியின் நிர்வாகிகளில் ஒருவரான பேராசிரியர் புனித் சிங் கூறும்போது, “2016-ம் ஆண்டு இங்கு பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பல ஏழைகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உணவின்றி தவிப்பதை பார்த்து அலகாபாத் நகரின் அறிவுஜீவிகளால் இந்த தானிய வங்கி துவக்கப்பட்டது. ஆனால், தானியங்களுக்கு பதில் பணம் வாங்கவில்லை’ எனத் தெரிவித்தார்.
இந்த வங்கியின் மூலதனமாக 200 கிலோ அரிசி, 500 கிலோ கோதுமை மற்றும் 100 கிலோ பருப்பு இருந்துள்ளன. இவற்றை அலகாபாத்தின் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் தொடக்கத்தில் நன்கொடையாக அளித்திருந்தனர். இதுபோன்றவர்கள் தொடர்ந்து அளிக்கும் நன்கொடையால் அந்த வங்கியின் கிளைகள் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
இதில் தானியங்களை கடனாகப் பெற்று அதை 15 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த முடியாதவர்களும் உண்டு. எனினும், இவர்களிடம் மற்ற வங்கிகளை போல் பலவந்தமாக ஜப்தி செய்து அவற்றை வசூலிப்பது கிடையாது. கடனாகப் பெற்றவர்களுக்குப் பதிலாக அந்த தானியங்களை மற்றவர்கள் நன்கொடையாக அந்த வங்கிகளில் செலுத்தி விடுகின்றனர். இந்த வங்கியை நிர்வகிக்க சமூகத்தில் பொறுப்புணர்வு கொண்ட 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒரு கிளைக்கு அப்பகுதியை சேர்ந்த மூன்று நிர்வாகிகளும் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அலகாபாத்தின் யமுனை கரை, கோரவுன், மேஜா, மாண்டா, ஷங்கர்கர், ஜஸ்ரா, கங்கை கரை, பிரதாப்பூர், பகதூர்பூர், சாயிதாபாத், ஹண்டியா, தனுபூர், பூல்பூர் ஆகிய பகுதிகளின் கிராமங்களில் இதன் கிளைகள் மிகவும் எளிமையாக இயங்கி வருகின்றன. வங்கியின் ஓரிரு பணியாளர்களுக்கான ஊதியமும் ரொக்கமாக இன்றி, தானியமாகவே வழங்கப்படுகிறது. இதுவரையும் எந்த அரசுகளின் உதவியும் இன்றி செயல்படும் இந்த தானிய வங்கி பொதுமக்கள் இடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது. ‘பசியுடன் எவரும் உறங்கக் கூடாது. பசியால் எந்தக் குழந்தையும் அழக் கூடாது’ என்பது இந்த தானிய வங்கியின் முக்கிய நோக்கமாக உள்ளது.