

திருவனந்தபுரம்
கேரளாவில் மோடியைப் புகழ்ந்ததால் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டு பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி, கேரள மாநில பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி (52). இவர் கடந்த 2009-ம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். அப்போது, குஜராத் மாடல் வளர்ச்சி குறித்து மோடியைப் பெருமையாகப் பேசினார். இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அப்துல்லா குட்டி 2011-ம் ஆண்டு கண்ணூர் சட்டப்பேரவை தொகுதியில் எம்எல்ஏ ஆனார். 2016-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் கண்ணூர் தொகுதியில் கண்டனப்பள்ளி ராமச்சந்திரனிடம் தோல்வி அடைந்தார் .
பின்னர் அப்துல்லா குட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காந்தியவாதி என்ற தலைப்பில் பிரதமர் மோடி குறித்துப் புகழ்ந்து எழுதியிருந்தார். பிரதமர் மோடி தலைமையில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளைப் பாராட்டி எழுதினார்.
அப்துல்லா குட்டியின் செயல்பாடுகளும், பிரதமர் மோடியைப் பாராட்டி எழுதிய விதமும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், நோட்டீஸ் அனுப்பி அப்துல்லா குட்டியிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், சரியான விளக்கம் அளிக்காததால், அப்துல்லா குட்டி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து டெல்லிக்கு நேற்று சென்ற அப்துல்லா குட்டி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா இருவரையும் சந்தித்துப் பேசினார். பின்னர் அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் அப்துல்லா குட்டியை கேரள மாநில பாஜக துணைத் தலைவராக நியமித்து கட்சித் தலைமை நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோலவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த பகுல்யன் பாஜகவின் கேரள மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறகையில் ‘‘பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் சிறுபான்மை சமூகத்தினரும், பிற கட்சியினரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்’’ எனக் கூறினார்.