

தனது தோற்றத்தை வைத்தே பதவி உயர்வு பெற்றதாக சித்தரித்து எழுதிய பிரபல ஆங்கில வாரப் பத்திரிகையை எதிர்த்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டெல்லியிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்று, தெலங்கானா பெண் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலை மறைமுகமாக விமர்சித்து வெளியிட்ட கட்டுரையும் கேலிச்சித்திரமும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தெலுங்கானா மாநில அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால். இவர் சமீபத்தில் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால் பெயரை குறிப்பிடாமல், "பெண் அதிகாரி பதவி உயர்வு பெற்றுள்ளது ஆச்சரியமாக உள்ளது. அவர் தனது அழகு, உடை அணியும் விதம் போன்றவற்றை வைத்து அனைவரையும் கவரக்கூடியவர். ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும் அவர் இடம்பெற்றுவிடுகிறார். முதல்வர் அலுவலக விழா அனைத்திலும் இடம்பெறுகிறார்.
காண்பவரை கவரக் கூடியவராக இருக்கும் அந்த அதிகாரி ஃபேஷன் ஷோவிலும், ஜீன்ஸ் பேன்ட் மற்றும் பிரில் வைத்த சட்டைப் போட்டு வந்து அனைவரையும் அசத்தினார்" என்று குறிப்பிட்டு பெண் அதிகாரியைச் சித்தரிக்கும் கேலிச்சித்திரத்தையும் வெளியிட்டது.
இது தெலுங்கானா மாநில அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பத்திரிகைக்கு கடும் கண்டன நோட்டீஸும் அனுப்பியுள்ளார் அதிகாரி ஸ்மிதா. இது குறித்து அவர் கூறும்போது, "ஐஏஎஸ் அதிகாரியான என்னை இழிவுபடுத்தி பிரபல வாரப் பத்திரிகை கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனக்கே இது போன்ற நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலையைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை. இந்த விவகாரத்தை சட்டபூர்வமாக எதிர்க்க உள்ளேன். இது குறித்து பத்திரிகை பதில் அளித்தாக வேண்டும்" என்றார்.
மேற்குவங்கத்தை சேர்ந்தவரான ஸ்மிதா சபர்வால் (38). இவரது தந்தை முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். கடந்த 2011-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இவர் ஆந்திர மாநிலம் சித்தூரின் மதனப்பள்ளியின் துணை ஆட்சியரானார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளைக் கடந்து தெலங்கானா முதல்வர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் அகும் சபர்வால் என்ற ஐபிஎஸ் அதிகாரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.