

புதுடெல்லி
மோடி எதிர்ப்புக் கருத்துகளை நான் கூறும் வகையில் ஊடகங்கள் எனக்கு வலைவிரிப்பதாக பிரதமர் மோடி என்னை வேடிக்கையாக எச்சரித்தார் என நோபல் பரிசு வென்ற அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.
அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரெமர் மூவருக்கும் இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நோபல் பரிசு வென்ற அறிஞர் அபிஜித் பானர்ஜி இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கே சென்று சந்திதார்.
இந்த சந்திப்பு குறித்த செய்தியாளர்களை சந்திப்பு நடந்தது. அப்போது நிருபர் ஒருவர் இந்தியப் பொருளாதார நிலை தொடர்பாக அபிஜித் சொன்ன கருத்து குறித்து கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியை மின்னல் வேகத்தில் மறுதலித்த அபிஜித் பானர்ஜி, "பிரதமர் என்னுடனான ஆலோசனையை ஒரு பகடியைச் சொல்லித்தான் ஆரம்பித்தார்.
ஊடகங்கள் எப்படி மோடி எதிர்ப்பு கருத்துகளை நான் கூறும் வகையில் வலைவிரிக்கின்றன எனக் கூறினார்.
அவர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால், நான் இதுதொடர்பான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லப்போவதில்லை.
பிரதமர் மோடியை சந்தித்தது எனக்குக் கிடைத்த சிறப்பாகப் பார்க்கிறேன். அவர் தனது பொன்னான நேரத்தை கனிவுடன் எனக்காக ஒதுக்கி நிறைய விசயங்களைப் பற்றி பேசினார். அவர் இந்தியா மீது கொண்டுள்ள பார்வை தனித்துவம் வாய்ந்தது" என்றார்.