Published : 22 Oct 2019 02:07 PM
Last Updated : 22 Oct 2019 02:07 PM

இந்தியா எப்போதும் தானாக தாக்குதல் நடத்தியதில்லை; ஆனால் பதிலடிக்குத் தயங்கியதில்லை: ராஜ்நாத் சிங்

மும்பை

இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் தானாக சண்டைக்குச் சென்றதில்லை. ஆனால் அத்துமீறல்கள் நடைபெறும்போது தட்டிக்கேட்கத் தயங்கியதில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

மும்பையில் கடற்படை தளபதிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்த ராஜ்நாத் சிங், "இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் தானாக சண்டைக்குச் சென்றதில்லை. ஏன் ஓர் அங்குல அந்நிய நிலப்பரப்பைக்கூட ஆக்கிரமித்ததில்லை. அதேவேளையில் நம் மீது அத்துமீறல்கள் நடக்கும்போது தகுந்த பதிலடியை வழங்க இந்தியப் படைகள் தவறியதே இல்லை.

கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது. மும்பை தாக்குதல் போல் மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறாமல் இருக்க கடற்படை தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

முன்னதாக, பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீது அகமது, "ஜம்மு காஷ்மீரின் தாங்தார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்ந்தால், இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுப்போம்" என எச்சரித்திருந்தார்.

இதனை மறைமுகமாக சுட்டிக்காட்டியே ராஜ்நாத் சிங் இன்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர், "மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நாம் இறக்குமதியில் சார்ந்து இருப்பதைக் குறைக்க வேண்டும்" என ராஜ்நாத் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x