Published : 22 Oct 2019 01:26 PM
Last Updated : 22 Oct 2019 01:26 PM

பிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடியை நோபல் பரிசு பெறும் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி இன்று சந்தித்தார்.

டெல்லியில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பொருளாதார நிலவரம் குறித்து அபிஜித் பானர்ஜி விவாதித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு வெகு சிறப்பாக அமைந்தது. இந்தச் சந்திப்பின் வாயிலாக சாமானியர்களின் அதிகார மேம்பாட்டின் மீது அபிஜித் கொண்டுள்ள ஆர்வம் தெளிவாக வெளிப்பட்டது. இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசித்தோம். அபிஜித்தின் சாதனைகளைக் கண்டு இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவருடைய எதிர்காலப் பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

சர்ச்சையான விமர்சனப் பின்னணியில் ஒரு சந்திப்பு

அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரெமர் மூவருக்கும் இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் இந்திய அரசு அபிஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தது.

இந்நிலையில்தான் அபிஜித் பானர்ஜி இந்தியப் பொருளாதாரம் மீது காத்திரமான விமர்சனத்தை முன்வைத்தார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அபிஜித், "என் பார்வையில், இந்தியப் பொருளாதாரம் மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் பிரச்சினை உள்ளது என்பதை அரசு உணர்ந்து வருகிறது. ஆனால், பிரச்சினையை உணரும் வேகத்தைவிட பொருளாதார மந்தநிலை மோசமடைந்து வருகிறது.

தேவை தான் தற்போதைய பெரிய பிரச்சினை என நினைக்கிறேன். தேவைகள் குறைந்து வருவதால் தான் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. தேவையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டிய, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் "அபிஜித் பானர்ஜி அறிக்கை குற்ற உணர்வை ஏற்படுத்தவில்லையா?" என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், அபிஜித் பானர்ஜி இடதுசாரி சிந்தனை கொண்டவர் என விமர்சித்திருந்தார்.

ஏற்கெனவே பொருளாதார மந்தநிலை குறித்த விமர்சனங்கள், விவாதங்கள் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்திவந்த நிலையில் அபிஜித் பானர்ஜியின் பேச்சு அதற்கு மேலும் இரைபோட்டது.

இத்தகைய சர்ச்சைகளுக்கு இடையேதான் அபிஜித் பானர்ஜி - பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x