

புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், 4-வது முறையாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு பாஜக அரசு புதிய மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. மக்க ளவையில் இந்த மசோதா நிறை வேறினாலும், மாநிலங்களவை யில் பாஜக.வுக்கு போதிய பலம் இல்லாததால் நிறைவேறவில்லை. விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்கள் உள்ளதால் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்பின், குறித்த காலத்துக்குள் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. அதனால், 2-வது முறையாக அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த மே மாதம் 31-ம் தேதி 3-வது முறையாக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி முடிய உள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால், இந்தக் கூட்டத் தொடரிலும் மசோதாவை நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. அவசர சட்டம் 6 மாத காலம் செல்லுபடியாகும். அதற்குள் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி ஒப்புதல் பெறாவிட்டால் அவசர சட்டம் காலாவதியாகி விடும்.
இந்நிலையில், 4-வது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி 4-வது முறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அதுவே முதல்முறையாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், “இதற்கு முன்னரும் 15 மசோதாக்கள் 2 அல்லது அதற்கு மேல் அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன’’ என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதற்கிடையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா, பாஜக எம்.பி. எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. இக்குழு தங்கள் முடிவை நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் நாளில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், தங்கள் ஆய்வை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க இக்குழு மேலும் 2 வார கால அவகாசம் கேட்க திட்ட மிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங் கள் கூறுகின்றன.