

வியாபம் ஊழலில் மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
‘வியாபம்’ என்பது மத்தியப் பிரதேத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் ‘பணியாளர் தேர்வாணையம்’ போன்ற அமைப்பு.
இந்த அமைப்பில், அரசியல் செல்வாக்கும் பண பலமும் அதிகார துஷ்பிரயோகங்களும் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் தொடங்கி பலர் மீது இந்த ஊழலில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ம.பி. ஆளுநர் ராம் நரேஷ் யாதவை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.