

கொல்கத்தா,
கடினமான நேரங்களில் பரூக் அப்துல்லாவுக்கு தான் துணை நிற்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ட்விட்டரில் உறுதியளித்துள்ளார்.
370-வது பிரிவை ரத்து செய்த பின்னர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
காஷ்மீரில் நிலைமை சீரடைந்துவரும் நிலையில் ஒவ்வொரு தலைவராக விடுதலை செய்யப்படுவார்கள் என்று காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார். அதன்படி கடந்த 16-ம் தேதி பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா எப்போதும் மம்தா பானர்ஜியுடன் நல்லுறவைப் பேணி வருபவர். கடந்த ஜனவரி 19-ம் தேதி அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற யுனைடெட் இந்தியா பேரணியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பரூக் அப்துல்லாவின் 82-வது பிறந்த நாளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா தனது வாழ்த்துகளை இன்று ட்விட்டரில் தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி தனது வாழ்த்துப் பதிவில், ''பரூக் அப்துல்லா ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இவை உங்களுக்குக் கடினமான காலங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். தயவுசெய்து நேர்மறையாக இருங்கள். உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்'' என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.