அயோத்தி வழக்கில் எழுத்துபூர்வமான கருத்து தாக்கல்: முஸ்லிம் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

அயோத்தி வழக்கில் எழுத்துபூர்வமான கருத்து தாக்கல்: முஸ்லிம் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி

அயோத்தி வழக்கில் எழுத்துபூர்வமான கருத்துக்களை தாக்கல் செய்ய முஸ்லிம் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடத்தியது. நாற்பது நாட்கள் தொடர்ந்து நடந்த விசாரணையில் இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக நவம்பர் 4 முதல் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.

இதனிடையே உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்த 3 பேர் அடங்கிய சமரசக் குழு கடந்த 16-ம் தேதி சீலிடப்பட்ட உறையில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்தநிலையில் முஸ்லிம்கள் தரப்பு வழக்கறிஞர் தங்கள் தரப்பு எதிர்வாதம் மற்றும் இறுதியான ஆவணங்கள், கருத்துக்களை உச்ச நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் எந்த தரப்பினரும் தங்கள் தரப்பு கருத்துக்களை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்க அனுமதி அளிப்பதாக தெரிவித்தது.

தங்கள் எழுத்துபூர்வமான வாதத்தை மூடிய உறையில் வைத்து வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சமர்ப்பிப்பதாக முஸ்லிம் தரப்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in