Published : 21 Oct 2019 11:19 AM
Last Updated : 21 Oct 2019 11:19 AM

மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் கனமழை: வேட்பாளர் மீது தாக்குதல், கார் தீவைப்பு

மும்பை

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. அமராவதி மாவட்டம், மோரிஷி-வருட் தொகுதியின் வேட்பாளர் தேவேந்திர புயர் வந்த வாகனத்தை அடையாளம் தெரியாத சிலர் தாக்கி அவரின் வாகனத்தைத் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு மந்தமாக நடந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் இன்று நடந்து வருகிறது. பாஜக -சிவசேனா கூட்டணி 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. அதேபோல காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியும் கடும் சவால் அளிக்கும் வகையில் பிரச்சாரம் செய்து தேர்தலைச் சந்தித்து வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து மக்கள் மாநிலம் முழுவதும் உள்ள 96,661 வாக்குச்சாவடிகளில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவரின் மனைவியும் நாக்பூரில் காலையில் வாக்களித்துவிட்டு வந்த காட்சி

மகாராஷ்டிராவின் தெற்கு கொங்கன் பகுதி, மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகள், லாட்டூர், ஓஸ்மானாபாத், மாரத்வாடா பகுதியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதற்கு ஏற்றார்போல் இன்று காலையிலிருந்தே இந்தப் பகுதிகளில் இடைவெளி விட்டுத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கனமழை பெய்யும் சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு மந்தமாக நடந்து வருகிறது

இதற்கிடையே அமராவதி மாவட்டம், மோர்ஷி வருட் தொகுதியின் சுவாபிமானி கட்சியின் வேட்பாளர் தேவேந்திர புயர் வந்த காரை அடையாளம் தெரியாத சிலர் தாக்கி தீ வைத்தனர். இதில் வேட்பாளர் தேவேந்திராவுக்கும் காயம் ஏற்பட்டது. தேவேந்திர புயர், பாஜகவைச் சேர்ந்த மாநில வேளாண் அமைச்சர் அனில் போன்டேவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இந்தி நடிகை மாதுரி தீக்‌ஷித் மும்பை பாந்த்ரா பகுதி வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வந்த காட்சி

சுவபிமாணி கட்சியின் தலைவர் ராஜு சேத்தி கூறுகையில், "எங்கள் வேட்பாளர் தேவேந்திர புயர் தான் போட்டியிடும் தொகுதியில் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்று போலீஸிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. வருட் நகர் அருகே இன்று காலை அவரின் கார் வந்தபோது அவரின் காரை அடையாளம் தெரியாத சிலர் அடித்து நொறுக்கித் தீ வைத்துள்ளார்கள். தேவேந்திர புயரும் காயமடைந்துள்ளார். இப்போது அமராவதி மருத்துவமனையில் தேவேந்திரா அனுமதிக்கப்பட்டுள்ளார் " எனத் தெரிவித்தார்

இந்தச் சம்பவத்தையடுத்து அமராவதி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவேந்திராவை தாக்கியவர்கள் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x