Published : 21 Oct 2019 10:47 AM
Last Updated : 21 Oct 2019 10:47 AM

மகாராஷ்டிராவில் 10 மணி வரை 5.17% வாக்குகள் பதிவு; நிதின் கட்கரி, சுப்ரியா சுலே, அமீர் கான் வாக்களித்தனர்

மும்பை

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடந்து வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி 5.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மும்பை மாநகரத்தில் உள்ள தொகுதிகளில் மட்டும் காலை 10 மணி நிலவரப்படி 10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மொத்தம் 235 பெண் வேட்பாளர்கள் உள்பட 3,237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.9 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 96,661 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆளும் பாஜக, சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வர் பட்நாவிஸ் உள்ளிட்ட பாஜக, சிவசேனா தலைவர்கள் தீவிரமாகப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்கள்.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 152 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகள் 12 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

அதேபோல, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இரு கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் 147, அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ் 262, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 101, மார்க்சிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் 16 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

ஆட்சியைப் பிடிக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும் இழந்த ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளன. நாக்பூர் தென் மேற்கு தொகுதியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், போட்டியிடுகிறார் நானதேத் மாவட்டத்தில் அசோக் சவான், காரத் தெற்கு தொகுதியில் பிரிதிவிராஜ் சவான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக ஒருவர் நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல், அவரின் மனைவி வர்ஷா ஆகியோர் காண்டியா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, மனைவி உஜ்வாலா, மகள் பிரணி ஷின்டே ஆகியோர் சோலாப்பூரில் வாக்களித்தனர்.

அதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே பாரமதி நகரில் தனது வாக்கைச் செலுத்தினார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவரின் மனைவி காஞ்சனாவுடன் வந்து நாக்பூரில் வாக்களித்தார்.

மேலும் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, நடிகை லாரா தத்தா, நடிகர் அமீர் கான் ஆகியோர் பாந்த்ரா மேற்கு தொகுதியில் இன்று காலை வாக்களித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x