

பனாஜி,
கோவாவில் சில மாடுகள் சிக்கன் மீன்களைத் தவிர வேறு எதையும் தொடுவதில்லை என்று கோவா அமைச்சர் ஒருவர் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.
வடக்கு கோவாவில் உள்ள அர்போரா கிராமத்தில் நேற்று நடந்த விழாவில் கலக்குட் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவும் மாநில குப்பை மேலாண்மை அமைச்சருமான மைக்கேல் லோபோ கலந்துகொண்டார். அதில் கோவாவின் கடலோர கிராமங்களான கலங்குட் மற்றும் காண்டோலிம் உள்ளடக்கிய பல கிராமங்களில் வளரும் மாடுகள்ப் பற்றி சில அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டார்.
கோவா அமைச்சர் மைக்கேல் லோபோ.
விழாவில் கோவா அமைச்சர் கூறியதாவது:
கால்நடைகள் சைவம் என்று நாம் எப்போதும் சொல்கிறோம். ஆனால் கோவாவின் கடலோர கிராமங்களான கலங்குட் மற்றும் காண்டோலிம் உள்ளடக்கிய பல கிராமங்களிலும் வளரும் மாடுகள் அசைவமாக மாறியுள்ளன. அந்த மாடுகள் உரிய பாதுகாப்பின்றி மிகவும் தவறான முறையில் வளர்க்கப்பட்டதால் அவை சுத்த அசைவமாக மாறிவிட்டன. கோழி எலும்புகள் மற்றும் வறுத்த மீன்களை மட்டுமே சாப்பிடுகின்றன.
கடலோர சுற்றுலாவிற்கு வருபவர்கள் அதை கெடுத்து வைத்துள்ளனர். அசைவ வாசனைபிடித்து வளர்ந்துள்ள இந்த 76 மாடுகளை சிறைபிடித்து மேயெம் கிராமத்தில் கோமண்டக் கோசேவக் மகாசங்கம் நடத்தும் கோசாலைக்கு அனுப்பி வைத்தோம். அங்கே அவற்றிற்கு சைவ உணவு சாப்பிட கொடுக்கப்பட்டன. எனினும் அங்கும் அந்த மாடுகள் அசைவ உணவையே எதிர்பார்த்தன. .
அங்கு அவை நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை புல், தானியங்கள் அல்லது அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கால்நடை தீவனத்தை அவை தொடக்கூடவில்லை. உணவகங்களிலிருந்து கிடைக்கும் வாசனையோடு சமைக்கப்பட்ட கோழி எலும்புகள், வறுத்த மீன் போன்ற அசைவ உணவுகளை வழங்கினால் உடனே சாப்பிட்டுவிடுகின்றன.
இத்தகைய அசைவ உணவை உட்கொள்வதால், அவற்றின் உணவுமுறை மனிதர்களைப் போலவே மாறிவிட்டது. முன்பு அவை தூய சைவ உணவை விரும்பி உண்டன. ஆனால் தற்போது அசைவ உணவின் வாசனை வந்தால்தான் சாப்பிடவே எழுந்து பார்க்கின்றன.
எப்படியாயினும் இது மாற்றப்பட வேண்டும். அதற்காக சிறப்பு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். இது ஒரு நாளில் முடிகிற காரியமில்லை என்றனர். அதனால் அவர் வெளியே செல்லமுடியாதபடி அங்கே தங்கவைத்துள்ளோம்.
மருத்துவ ரீதியாக உரிய சிகிச்சையளித்து மீண்டும் சைவ உணவு உண்பவையாக மாற்றுவதுதான் அவர்கள் முதல் வேலை. இதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும் என்று மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்''
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கு கோவாவில் உள்ள கலங்குட் மற்றும் காண்டோலிம் கடற்கரை கிராமங்கள் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அங்கு ஏராளமான அசைவ உணவகங்கள் உள்ளன. இரண்டு கிராமங்களிலும் அதிக கால்நடைகள் உள்ளன, இவற்றை வளர்ப்பவர்கள் பொறுப்பின்றி அப்படியே விட்டுவிடுவதால் அவைகளில் பல மாடுகள் பல சாலை விபத்துக்களை உயிரிழந்துள்ளன.
இந்த அச்சுறுத்தலைத் தடுக்க கோவா அரசாங்கம் 2013ல் ஒரு திட்டம் தீட்டியது. பாதுகாப்பின்றி சுற்றித் திரியும் இந்த கால்நடைகளை அடைத்துவைக்கும் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கு ஊக்கத் தொகையும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தது.