இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல்: 4 தீவிரவாத முகாம்கள் அழிப்பு;அத்துமீறிய 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 4 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் 2 பேர் வீரமரணம் அடைந்தனர், பொதுமக்கள் ஒருவர் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி மூலம் முதலில் தாக்குதல் நடத்தினார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பீரங்கி தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

லடாக் பகுதியில் உள்ள சீனா எல்லைப்பகுதியில் இருக்கும் லே-காரகோரம் பகுதியில் இருக்கும் பாலத்தை நாளை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி பிபின் ராவத் திறந்து வைக்க உள்ளனர்.

இதற்கு முன்பாக நேற்று முன்தினம் இருவரும் லடாக் பகுதிக்கு வந்து சென்றனர். இவர்கள் வந்து சென்றபின் நேற்று இரவு முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அத்துமீறித் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.

இதற்கு இந்திய ராணுவத்தினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதுகுறித்து ராணுவத்தினர் தரப்பில் கூறுகையில், " சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தாங்தர் செக்டார் பகுதியில் நேற்று இரவு முதல் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளை இந்தியப் பகுதியில் அனுப்பும் பொருட்டு இந்த தாக்குதலைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் முன்னெடுத்தார்கள்.

இந்த தாக்குதலில் தாங்தர் பகுதியில் உள்ள குந்திசாத் கிராமத்தின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் இந்தியர்கள் முகமது சித்திக்(வயது55) என்பவர் கொல்லப்பட்டார்.

மேலும், முகமது மகபூல், முகமது ஷபி, யூசுப் ஹமீது ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்திய ராணுவ வீரர்கள் இருவரும் கொல்லப்பட்டார்கள்.

பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி மூலம் இந்தியப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியத் தரப்பிலும் தகுந்த பதிலடி தரப்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தினர் பீரங்கி மூலம் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாத முகாம்களை அழித்தனர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 5 பேர் கொல்லப்பட்டார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்த ஆண்டில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 2,300 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். கடந்த ஆண்டில் 1,629 முறை தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

, ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in