

புதுடெல்லி,
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மாவின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தில் நேற்று காந்திஜிக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியின்போது, மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு #ChangeWithin என்ற 100 விநாடி கலாச்சார வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டார்.
காந்தியின் 150 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக, புதுடெல்லியில் நடைபெற்ற இந்த விழாவுக்காக, திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எட்டு முன்னணி திரை நட்சத்திரங்களை சிறப்பு அஞ்சலிக்காக அழைத்து வந்தார்.
இந்த நிகழ்ச்சி பிரதமர் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
பாலிவுட் பிரமுகர்கள் பங்கேற்ற மகாத்மா காந்தியின் 150வது ஆண்டுவிழா கூட்டத்தில், சோனம், கங்கனா, ஹிரானி, திரைப்பட இயக்குநர்கள் ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால் கடா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் தன்னுடன் பாலிவுட் நட்சரத்திரங்கள் சேர்ந்துநிற்கும் படங்களை வெளியிட்டுள்ளார்.
மோடி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
''மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த திரைப்பட சகோதரத்துவம் ஒன்று திரள்கிறது! #ChangeWithin ஒரு சிறந்த முயற்சி, காந்தி ஜியின் செய்தியை தொலைதூரத்திலும் பரவலாகவும் வேகமாக கொண்டு செல்வதை இது உறுதி செய்யும். இது மக்களை பாபுவின் (காந்தியின்) மீது அன்பு செலுத்த ஊக்குவிக்கும்.
பாலிவுட்டின் முன்னணி திரைப்பட பிரமுகர்கள் மற்றும் முக்கிய கலாச்சார முகங்களுடனான சந்திப்பு பலனளித்தது. மகாத்மா காந்தியின் எண்ணங்களை சினிமா மூலம் பரப்புவது, காந்தி ஜியின் கொள்கைகளை இளைஞர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது... போன்ற பரந்த அளவிலான பொருள்களில் நாங்கள் எண்ணங்களை பரிமாறிக்கொண்டோம்.
நமது திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு தொழில் மாறுபட்டது மற்றும் துடிப்பானது. சர்வதேச அளவில் அதன் தாக்கமும் மகத்தானது. நமது திரைப்படங்கள், இசை மற்றும் நடனம் மக்களையும் சமூகங்களையும் இணைக்கும் மிகச் சிறந்த வழிகளாக மாறிவிட்டன.
இவ்வாறு பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
பிரதமருடன் உரையாடிய பிறகு பாலிவுட் பிரமுகர்கள் கூறியதாவது:
ஷாருக்கான்: இதுபோன்ற ஒரு காரணத்திற்காக திரைத் துறையைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்தமைக்காக மிக்க நன்றி. இந்தியாவிற்கும் உலகிற்கும் காந்தி ஜியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதில் திரையுலகம் சுய ஆர்வத்துடன் செயல்பட முடியும், மேலும் காந்திஜியின் செய்திகளை பரப்பும் வேலையை உருவாக்குவது முக்கியம். இதில் எப்போதுமே வணிக நோக்கம் கொண்டதாக இருக்கக்கூடாது, ஆனால் மக்களை ஈர்க்கக்கூடிய, பொழுதுபோக்கு முறையில், அனைவரும் ஈடுபட வேண்டும்.
அமீர்கான்: இன்று பிரதமருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது.. அவர் பேச்சு உற்சாகமூட்டியது. மேலும் அவர் தான் சொல்லவேண்டியவற்றை இதமாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்தார்.
ட்விட்டர் பதிவில் ஹிரானி: மகாத்மா காந்திஜியின் மகத்துவத்தைக் காண்பிப்பதில் ஒரு சிறிய பங்களிப்பு செய்ய கிடைத்த வாய்ப்புக்கு ஆழ்ந்த மரியாதை. மகாத்மாவின் 150வது ஆண்டை நினைவுகூரும் #ChangeWithinஐ கொண்ட்டாடுவோம். வணங்குவோம்.''
காந்தி வீடியோவில் பாலிவுட் நட்சத்திரங்கள்
100 விநாடிகள் கொண்ட #ChangeWithin வீடியோ காந்தியின் வாழ்க்கை, அவரது போதனைகள் மற்றும் மதிப்புகள் மற்றும் அவரது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது, இந்த வீடியோவில் அமீர், ஷாருக், சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், சோனம் கபூர் அஹுஜா, கங்கனா ரனாவத் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.