Published : 20 Oct 2019 12:19 PM
Last Updated : 20 Oct 2019 12:19 PM

10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய ராகுல் காந்தி 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி,


பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி குறித்து விமர்சித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கடுமையாகச் சாடியுள்ளார்.

கண்மூடித்தனமான வெறுப்பால் இந்த சகிப்பற்றவர்கள் இருக்கிறார்கள், தொழில்முறை என்றால் என்னவென்று தெரியாது என்று ராகுல் காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட இந்தியர் அபிஜித் பானர்ஜி, " இந்தியாவின் பொருளாதாரம் மோசமான சூழலில் இருப்பதாகவும், உடனடியாக சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும் பானர்ஜி விமர்சித்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று புனே நகரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். ஆனால் பானர்ஜி ஒருசார்புடைய சிந்தனையாளர் போன்று பேசுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டமான குறைந்தபட்ச வருவாய் கிடைக்கும் திட்டத்தை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். அந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அதைப் பற்றிச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தனியார் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது குறித்து வேதனை தெரிவித்த பானர்ஜி, " என்னுடைய தொழில்முறையை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பிவிட்டார்" என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், அபிஜித் பானர்ஜிக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வார்த்தைக்குக் கண்டனம் தெரிவித்தும் ராகுல் காந்தி ட்விட்டரில் சாடியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், " அன்புள்ள பானர்ஜி, கண்மூடித்தனமான வெறுப்பால் இந்த சகிப்பற்றவர்கள் இருக்கிறார்கள்.

தொழில்முறை என்றால் என்ன என்பது குறித்து இவர்களுக்கு எந்தவிதமான சிந்தனையும் இல்லை. 10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்கு நீங்கள் விளக்க முடியாது. உங்களின் பணியைப் பார்த்தும், வாங்கிய பட்டம் குறித்தும் லட்சக்கணக்கான மக்கள் பெருமை கொள்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பதிலடி தரும் வகையில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் ட்விட்டரி்ல் நேற்று சாடியிருந்தார். அதில் " பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. உங்கள் பணி பொருளாதாரத்தை முன்னேற்றுவதுதான். அதைவிடுத்து இவ்வாறு காமெடி சர்க்கஸ் நடத்துவது அல்ல" என்று சாடினார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x