

புதுடெல்லி
பாஜக எம்.பியும், முன்னாள் இந்திய அணி வீரருமான கம்பீர் பாகிஸ்தானைச் சேர்ந்த 7வயது சிறுமிக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக விசா பெற்றுக்கொடுத்து உதவியுள்ளார்.
பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே தற்போது அரசியல் ரீதியான உறவுகள் சீராக இல்லாத நிலை, எல்லையில் பதற்றம் போன்ற சூழல்கள் இருந்தாலும் மனிதநேயத்தோடு எழுப்பப்பட்ட கோரிக்கைக்குக் கம்பீர் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 7வயது சிறுமி ஓமானியா அலி. இந்த சிறுமிக்கு இதயத்தில் கோளாறு இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. பாகிஸ்தானில் தரமான சிகிச்சை இல்லாததையடுத்து, இந்தியாவில் சிகிச்சை பெற அந்த சிறுமியின் பெற்றோர் விரும்பினர். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப்பிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
முகமது யூசுப் தொலைப்பேசி வாயிலாக பாஜக எம்.பி. கவுதம் கம்பீரைத் தொடர்பு சிறுமியின் உடல்நலம் குறித்துத் தெரிவித்து, விசா பெற்றுக்கொடுக்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்குச் சம்மதம் தெரிவித்த கம்பீர், உடனடியாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கவுதம் கம்பீரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு அந்த பாகிஸ்தான் சிறுமிக்கு உடனடியாக விசா வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் நிருபர்களிடம் கூறுகையில், " பாகிஸ்தான் சிறுமியின் உடல்நலன் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் மூலம் அறிந்தேன். உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி விசா வழங்கிடக் கோரினேன்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவின் பெயரில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்த சிறுமிக்கு விசா வழங்கியது. இது தொடர்பாக எனக்குக் கடந்த 9-ம் தேதி கடிதமும் வெளியுறவுத்துறை எழுதியுள்ளது. ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு இந்த சிறுமிக்கு நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்போது இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. பாகிஸ்தானுக்கும், ஐஎஸ்ஐக்கும் இந்தியாவுக்கும் பிரச்சினை இருக்கிறது. அதற்காக அந்த 7 வயது குழந்தை என்ன தவறு செய்தது. அதனால்தான் உதவி செய்தேன் " எனத் தெரிவித்தார்
இதுதொடர்பாக ட்விட்டரில் கம்பீர் குறிப்பிடுகையில், " ஒரு சின்ன இதயம் மற்றொரு எல்லையில் இருந்து தட்டியது, இந்த எல்லையிலிருந்த இதயம் அனைத்து தடைகளையும் அகற்றியது. இனிமையான தென்றல் காற்று அந்தச் சிறிய பாதங்களை வருடட்டும், இது ஒரு மகள் தனது வீட்டுக்கு வருவது போலாகும். பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்கிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எனது நன்றி. பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் சிறுமி ஓமானியா அலியின் மாமா அலி நவாஸ் நிருபர்களிடம் கூறுகையில், " இந்தியாவில் எனது மருமகளுக்கு சிகிச்சை பெற விசா பெற உதவி கம்பீருக்கு நன்றி. விரைவில் இந்தியா புறப்படுவோம்" எனத்தெரிவித்தார்
, பிடிஐ