

1991-ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக குரல் கொடுக்கும் கடமை தமக்கு உள்ளது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு தண்டனை - ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்க்கும் மத்திய அரசின் பொதுநல மனு இன்று உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய குழு முன்பு இன்று நடைபெற்ற விசாரணையின் போது, மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடலாமா என்று கேட்டு செய்திருந்த தமிழக அரசின் மனுவை நிராகரித்தனர்.
பிறகு விவகாரத்தை நீதிபதிகள் தரப்பில் முன்வைத்த தத்து, “மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்ச நீதிமன்றம். பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவிக்கவில்லை. ஆனால் மாநில அரசு இதற்கு மேலும் எங்கள் தீர்ப்பை வளைத்துள்ளது. அரசியல் சாசனம் 32-ம் பிரிவின் கீழ் மத்திய அரசு மூலம் சிபிஐ இது தொடர்பாக முயற்சி செய்ய முடியாதா? இந்த வழக்கு விசாரணையையே சிபிஐ-தான் மேற்கொண்டது, அதன் பிறகுதான் மரண தண்டனை விதிக்கப்பட்டது” என்றார்.
இடையே சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், 1991 ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 18 பேர் பலியாகி, 48 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்த போது, “பாதிக்கப்பட்டோர், பலியானோர் நலன்களை அரசுதான் கவனிக்க முடியும். எனவே அரசே பெற்றோர் நிலையிலிருந்து பாதிக்கப்பட்டோர் நலன்களுக்காக குரல் கொடுக்க முடியும்” என்றார்.
முன்னதாக, மத்திய அரசின் பொதுநல மனுவை தமிழக அரசு எதிர்த்துள்ளதையடுத்து இந்த மனுவின் பராமரிப்புத் தன்மை குறித்து நீதிபதிகள் அமர்வு மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
“மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பிறகே, இந்த விவகாரம், அதாவது குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்யும் விவகாரம் மாநில அரசு நீதிமன்றத்தைச் சேர்ந்ததாகி விடுகிறது. இந்நிலையில் குற்றவாளிகள் 23 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டனர், இது போதுமானது என்று கூறுகிறது மாநில அரசு, பிறகு நீங்கள் ஏன் பொது-உணர்வு நபராக எங்களிடம் வந்துள்ளீர்கள்” என்று தலைமை நீதிபதி தத்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் பதில் அளிக்கும் போது, “ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுதுக்குமான தண்டனை, அவர்களை விடுதலை செய்ய முடியாது, மேலும் மாநில அரசு இப்போது ஏன் இந்த மனுவின் நியாயத் தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறது?” என்றார்.
குற்றவாளிகள் சார்பாக வாதாடிய ராம் ஜெத்மலானியோ, சட்டத்தின் அனுமானிக்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் மத்திய அரசின் மனு அமைந்துள்ளது என்று கூறி, “எங்கள் கட்சிக்காரர்களின் விடுதலை இப்போது பிரச்சினைக்குள்ளாகியுள்ளது, 24 ஆண்டுகள் அவர்கள் சிறையில் கழித்து விட்டனர். மாநில அரசு உத்தரவுகளுக்குப் பிறகே 3 அல்லது 4 நாட்களுக்குள் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் மேலும் ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர்” என்றார்.
கடந்த ஆண்டு மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளின் மன்னிக்கும் அதிகாரம் மீது தடை விதித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, புதன்கிழமை ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் உட்பட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்வதன் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு விதித்திருந்த தடையை ரத்து செய்ய மறுத்துக்கூறும் போது, “இப்போதைக்கு எங்களது முந்தைய உத்தரவுகளை மாற்ற முடியாது” என்று கூறியுள்ளது.
ஜூலை 21, அதாவது இன்றைய தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைக்கும் போது, மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள், 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் கழித்த குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரங்களை மாநில அரசுக்கு திரும்ப வழங்குமாறு கோரினர்.
அதற்கு “இல்லை, இல்லை, வழக்கின் இந்த நிலையில் முடியாது, நாங்கள் இந்த விவகாரத்தை முழுதும் விவரமாக விசாரிக்கவுள்ளோம். அதன் பிறகு விடுதலை குறித்து முடிவெடுக்கலாம்” என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.
எனவே இந்த வழக்கில் முக்கியமான கேள்வியாக எழுந்திருப்பது என்னவெனில், சிபிஐ வழக்குகளில், ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்பதே.
ஜூலை 9, 2014-ல் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் மாநில அரசுகளின் அதிகாரங்கள் மீது உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. அதன் பிறகு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு விசாரணை மேலும் நீடிக்கும் என்று தெரிகிறது.