Published : 20 Oct 2019 07:39 AM
Last Updated : 20 Oct 2019 07:39 AM

தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டி: சமூக வலைதளங்களில் கல்லூரிக்கு குவியும் கண்டனம்

பெங்களூரு

காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டியை கவிழ்த்து தேர்வு எழுத வைத்த சம்பவம் கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் நடந்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின் றன.

ஹாவேரி மாவட்டத்தில் அமைந் துள்ள பகத் பி.யு.சி தனியார் கல்லூரியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவர்கள் தலை யில் அட்டைப் பெட்டியை கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகத் பியூசி கல்லூரியில் கடந்த 16-ம் தேதி பருவத் தேர்வு நடந்துள்ளது. அப்போது ஒவ்வொரு மாணவ, மாணவியின் தலையிலும் அட்டைப் பெட்டியைக் கவிழ்த்து தேர்வு எழுதுமாறு கல்லூரி நிர்வாகத்தால் அறிவுறுத் தப்பட்டுள்ளனர். காப்பி அடிப் பதைத் தவிர்க்க இவ்வாறு செய்ததாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான இந்தப் படங்களைப் பார்த்த சிலர் கல்லூரி நிர்வாகத்தை வெகுவாகக் கண்டித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் கூறும்போது, “இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மாணவர்களை மிருகங்கள் போல நடத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதுகுறித்து சமூக வலை தளங்களில் ஒருவர் கூறும்போது, “மாணவர்களை இதுபோன்று நடத்துவதை ஏற்க முடியாது. மாணவர்களை அவமானப்படுத்து வது போன்றதாகும் இது. தேர்வில் காப்பியடிப்பதைத் தடுக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. மாணவர்களின் தலையில் அட்டைப் பெட்டியைக் கவிழ்க்க வேண்டுமா என்ன? இதற்கு யார் ஒப்புதல் கொடுத்திருந்தாலும் கண்டனம் தெரிவிக்கிறோம்” என்றார்,

இதுகுறித்து கல்லூரியின் தலைவர் எம்.பி. சதீஷ் கூறும் போது, “இதேபோன்று பிஹாரில் மாணவர்களின் தலையில் அட்டைப் பெட்டியை கவிழ்த்து வைத்து தேர்வு எழுத வைத்தனர். அதற்கு அங்கு பாராட்டுகள் கிடைத்தன. சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பு இருந்தது.

அதைத்தான் நாங்கள் இங்கு பின்பற்றினோம். மாணவர்களின் நலனுக்காகத்தான் இதை செய் தோம். மாணவர்களின் கவனம் திசை திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை. அட்டைப் பெட்டியின் முன்பகுதியை மட்டும் திறந்துவைத்து அவர்களை தேர்வெழுத சோதனை முறையில் அனுமதித்தோம்.

இந்தத் திட்டத்துக்கு பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன” என்றார்.

இதுகுறித்து பொதுக் கல்வித்துறை இணை இயக்குநரக அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x