Published : 19 Oct 2019 04:40 PM
Last Updated : 19 Oct 2019 04:40 PM

ரிசர்வ் வங்கி முன்பு பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்: மயக்கமடைந்த பெண்- வீடியோ

மும்பை

பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பிதரக்கோரி மும்பை ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் திடீரென மயமக்கமடைந்தார்.

மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.

பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு இதுதொடர்பாக சோதனைகள் நடத்தி வருகிறது.

பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பி தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் திரும்பவும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பிஎம்சி வங்கியில் வைத்துள்ள பணத்தை திருப்பி எடுக்க முடியாமல் தவித்த வாடிக்கையாளர்களில் சஞ்சய் குலாஸ்தி என்ற ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஜெட் ஏர்வேஸில் வேலையிழந்த சஞ்சய் தன்னிடம் இருந்த பணம் 90 லட்சம் ரூபாயை பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்து இருந்தார்.

நிவேதிதா பிஜிலானி (வயது 39) என்ற மருத்துவர் பிஎம்சி வங்கியில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்து இருந்தார். அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் தங்கள் பணத்தை திருப்பிதரக்கோரி மும்பை ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் திடீரென மயமக்கமடைந்தார்.

— ANI (@ANI) October 19, 2019

இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x