Last Updated : 06 Jul, 2015 09:10 AM

 

Published : 06 Jul 2015 09:10 AM
Last Updated : 06 Jul 2015 09:10 AM

‘வியாபம்’ ஊழல் விவகாரத்தில் நிருபரின் மரணம் குறித்து நேர்மையான விசாரணை வேண்டும்: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து

வியாபம் ஊழல் குறித்த பல சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில்முறை தேர்வுகளில் நடந்த ஊழல் குறித்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் தொடர்புடைய மாணவி நம்ருதா தாமோர் கடந்த 2012-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். அவருடைய பெற்றோரி டம் 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி தனியார் சேனல் செய்தியாளர் அக் ஷய் சிங் என்பவர் பேட்டி எடுத்தார். அதன்பிறகு, அக் ஷய் சிங்கும் மர்மமமான முறையில் இறந்தார். இதனால் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “வியாபம் ஊழல் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நிருபர் அக் ஷய் சிங்கின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நேர்மையான விசாரணை நடத்துவதுதான் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதாக இருக்கும்.

38 வயதில் நிருபர் அக் ஷய் சிங் அகால மரணம் அடைந்தது சோகமானது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் கூறும்போது, “நிருபரின் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உலக விஷயங்கள் பற்றி எல்லாம் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கும் பிரதமர் மோடி, பாஜக அரசின் ஊழல் விஷயத்தில் தொடர்ந்து மவுனமாக இருப்பது ஏன்? வியாபம் ஊழலில் பலர் மரணம் அடைந்து வருகின்றனர். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடாதது ஏன்? நியாயமான விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிடுவதற்குள் இன்னும் எத்தனை பேர் மரணம் அடைய போகிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறும்போது, “ம.பி.யில் வியாபம் ஊழல், சத்தீஸ்கரில் அரிசி ஊழல், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா, தலைமறைவாக உள்ள லலித் மோடிக்கு உதவியது, மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் போன்ற எல்லா விஷயங்களிலும் மோடி மவுனமாகவே இருக்கிறார். ஊழலுக்கும் அவரது சகாக் களுக்கும் மோடி ஆதரவாக இருப்பதற்கு இதற்கு மேல் ஆதாரங்கள் தேவையில்லை” என்றார்.

அருண் ஜேட்லி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x