Published : 19 Oct 2019 03:33 PM
Last Updated : 19 Oct 2019 03:33 PM

370-வது பிரிவை மீண்டும் கொண்டுவர முடியுமா? ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால் 

நவபூர்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் அரசியலமைப்பின் 370-வது பிரிவை மீண்டும் கொண்டுவருவோம் என்று அறிவிக்க துணிச்சல் இருக்கிறதா என்று ராகுல் காந்திக்கு பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவதால் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள நவாபூரில் இன்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் வென்று இரண்டாவது முறையாகப் பிரதமராக மே மாதம் வந்தபின், முதல் பணியாக காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்த சிறப்பு அந்தஸ்தையும், 370-வது பிரிவையும் ரத்து செய்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கியதால் கடந்த 70 ஆண்டுகளாக, தீவிரவாதச் செயல்கள் அதிகரித்து அதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் சிந்தனையில் தேசிய நலன் மீது அக்கறை இல்லை. அந்தக் கட்சியின் நோக்கம் முழுமையும் வாக்கு வங்கி மீதுதான் இருக்கிறது. மகாராஷ்டிரா தேர்தலுக்கும், அரசியலமைப்பின் 370-வது பிரிவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று ராகுல் காந்தி கேட்கிறார்.

நான் அவருக்குச் சவால் விடுக்கிறேன், நீங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து நீக்கப்பட்ட அரசியலமைப்பின் 370-வது பிரிவை மீண்டும் கொண்டுவருவோம் என்று அறிவிக்க முடியுமா? இன்னும் தேர்தலுக்கு ஒருநாள் மட்டுமே இருக்கிறது. உங்களால் அறிவிக்க முடியுமா?"

இவ்வாறு அமித் ஷா சவால் விடுத்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x