Published : 19 Oct 2019 02:06 PM
Last Updated : 19 Oct 2019 02:06 PM

தெலங்கானாவில் பந்த்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, போக்குவரத்து முடங்கியது,கடைகள் அடைப்பு

ஹைதராபாத்

தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 15-வது நாளாக தொடரும் நிலையில், இன்று நடக்கும் பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளதால், மாநிலத்தில் போக்குவரத்து முடங்கியது, கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும், தொழிலாளர்கள் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் சேர்ந்துள்ளதால், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வரும் 28-ம் தேதிக்குள் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அமைப்பும், மாநில அரசும் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஹைதராபாத் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதால், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

இன்று காலை முதல் தொடங்கியுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மாநிலத்தில் ஆங்காங்கே சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. ஆனால் சாலையில் பெரும்பாலும் வாகனங்கள் செல்லாததால் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தெலங்கானாவில் உள்ள அரசுப் பேருந்துக் கழக ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், பேருந்துக் கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 15 நாட்களாகப் போராடி வருகின்றனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் ஏறக்குறைய 48 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளார்கள், ஆனால், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையை நிராகரித்த முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிக்குத் திரும்ப உத்தரவிட்டார். போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாததையடுத்து, 48 ஆயிரம் ஊழியர்களும் தாங்களாகவே வேலையிழந்ததாகவும் தெலங்கானா அரசு அறிவித்தது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்குச் செப்டம்பர் மாத ஊதியத்தையும் வழங்காததால் மன உளைச்சலுக்குள்ளான இரு ஊழியர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்குக் காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி, ஜனசேனா,இந்தியக் கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,தொழிலாளர் அமைப்புகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பலரும் ஆதரவு அளித்துள்ளார்கள்.

இதையடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் இன்று மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஆதரவு அளிக்கப்பட்டு இருந்தது.

இன்று காலையிலிருந்தே அரசுப் பேருந்துகள் எதையும் இயக்க விடாமல் போக்குவரத்து ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்து முடங்கியது.

ஹைதராபாத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையமான மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் ஏதும் இல்லாததாலும், பேருந்துகள் இயக்கப்படாததாலும் வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் ஆந்திரா மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள், பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இதுதவிர, ஓலா, உபர் நிறுவனங்களின் கார்களில் ஓட்டுநர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடகைக்கார்கள் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.

பஸ்களை இயக்கவிடாமல் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். டிஜேஎஸ் தலைவர் எம்.கொண்டாராம், டிடிபி தலைவர்கள் எல் ராமண்ணா, ஆர். சந்திரசேகர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே நிசாமாபாத், வனபார்த்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதையடுத்து, போலீஸார் பாதுகாப்புடன் அந்த பஸ்கள் பணி மனைக்கு கொண்டுசெல்லப்பட்டன. இருப்பினும் தீவிர பாதுகாப்புடன் சில பேருந்துகளை மட்டும் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் மாநில அரசு இயக்கி வருகிறது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x