Last Updated : 19 Oct, 2019 01:12 PM

 

Published : 19 Oct 2019 01:12 PM
Last Updated : 19 Oct 2019 01:12 PM

மூத்த கன்னட எழுத்தாளர் சித்தய்யா கார் விபத்தில் பலி: எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல்

பெங்களூரு

சாகித்ய அகாடமி விருதுபெற்ற கன்னட எழுத்தாளரும், தலித் சிந்தனையாளருமான கே.பி.சித்தய்யா (65) கார் விபத்தில் சிக்கி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கென்கெரே கிராமத்தை பிறந்தவர் எழுத்தாளர் கே.பி.சித்தய்யா (65). சிறுவயதில் இருந்தே கதை, கவிதை, நாவல் எழுதிவந்த இவர், 20‍க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

அம்பேத்கரிய சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட இவர், 50க்கும் மேற்பட்ட தலித் எழுச்சி பாடல்களையும் இயற்றியுள்ளார். கன்னட சாகித்ய பரிஷத் விருது, ராஜ்யோத்சவா விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர்,''இம்மண்ணில் மட்கியவர்களின் கதை''என்ற படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருதையும் பெற்றார்.

கல்வியாளர் கங்காதரையா நடத்திவந்த சித்தார்த்தா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய கே.பி.சித்தய்யா சமூக செயற்பாடுகளில் தீவிரமாக இருந்தார். எழுத்தாளர்கள் சித்தலிங்கையா, தேவனூரு மகாதேவ, பேராசிரியர் கிருஷ்ணப்பா ஆகியோருடன் இணைந்து பூசா போராட்டத்திலும் பங்கேற்றார்.

1970-களில் கர்நாடக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய தலித் சங்கர்ஷ சமிதி அமைப்பை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தன் சொந்த ஊரிலே மனைவி கங்கராஜம்மா மற்றும் மகனுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு சென்றுவிட்டு அவரது கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநர் மஞ்சுநாதா சம்பவ இடத்திலே பலியானார்.படுகாயமடைந்த உயிரிழந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரா, எழுத்தாளர் சித்தலிங்கையா உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர். அவரது அத்துணை மருத்துவ செலவையும் ஏற்பதாக பரமேஷ்வரா தெரிவித்தார்.

உடல்நிலை தேறிவந்த கே.பி.சித்தய்யா நேற்று அதிகாலை நுரையீரல் தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

கன்னட இலக்கிய வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்திய அவரது மறைவுக்கு முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கே.பி.சித்தய்யாவின் சொந்த ஊரில் நடந்த இறுதி சடங்கில் பங்கேற்ற சித்தராமையா, ''எனது நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன்''என கண் கலங்கினார். இதையடுத்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும், இலக்கிய வாசகர்களும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x