

புதுடெல்லி
ரேபரேலி நகர தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவான அதிதி சிங் தொடர்ந்து கட்சி உத்தரவை மீறி வருகிறார். எனினும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காங்கிரஸ் தயங்கி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மக்களவை தொகுதியான ரேபரேலியை சேர்ந்தவர் அதிதி சிங். இதன் நகர்ப்புறத் தொகுதியின் உபி சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அதித்தியின் நடவடிக்கை மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி கிடைத்த பின் மாறத் துவங்கியது. இதற்கு, அருகிலுள்ள அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தியும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வியுற்றது காரணமானது.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 –ன்படி கிடைத்துவந்த சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அக்கட்சியின் எம்எல்ஏவான அதிதி சிங் ஆதரவளித்து ட்வீட் செய்தார்.
இது உபி அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, அக்டோபர் 2 இல் முடிந்த நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உ.பி. சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது.
24 மணி நேரம் நடைபெற்ற இப்பேரவை கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஆனால், அதிதி சிங் அக்கூட்டத்தில் தம் கொறடா உத்தரவை மீறி கலந்து கொண்டார். இதற்காக அதித்திக்கு காங்கிரஸ் ஒருவாரத்தில் விளக்கம் அளிக்கும்படி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கும் அவர் இன்றுவரை எந்த பதிலும் அனுப்பவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதித்தி உபி முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இரண்டாவது முறையாக சந்தித்தார்.
இதுவும் காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு அனுப்பட்ட முதல் நோட்டீசுக்கே அதிதி பதில் அளிக்காத நிலையில், இரண்டாவதாகவும் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உபி காங்கிரஸ் வட்டாரம் கூறும்போது, ‘அமேதியை போல் சோனியாவின் தொகுதியிலும் நம் கட்சி வலுவிழக்க விரும்பவில்லை.
ரேபரேலியில் அடுத்த மக்களவைக்கு தன் தாய்க்கு பதிலாக பிரியங்கா வத்ரா போட்டியிட திட்டமிட்டு வருகிறார். இதனால், அங்கு கட்சி மிகவும் யோசித்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது.’ எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, மக்களவை தேர்தலுக்கு பின் ரேபரேலியை சேர்ந்தவரும் உ.பி. மேலவையின் காங்கிரஸ் உறுப்பினருமான தினேஷ் பிரதாப் சிங் பாஜகவில் இணைந்தார். இவருடன் தினேஷின் சகோதரரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ராகேஷ் சிங்கும் பாஜகவில் சேர்ந்து விட்டார்.
இவர்கள் மீது கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் உ.பி. சட்டப்பேரவைக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுபோல், அதிதியும் சென்று விடுவார் என அஞ்சி காங்கிரஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கருதப்படுகிறது.