

புதுடெல்லி
ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும், கண்டுபிடிக்க உதவும் டிஎன்ஏ தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை மக்களவைச் செயலாளர் நேற்று பிறப்பித்தார்.
இந்த டிஎன்ஏ மசோதாவில் டீயாக்ஸிரைபானுக்லியக் அமிலத்தை எவ்வாறு பயன்படுத்துவது, கட்டுப்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், குற்றங்கள், விபத்துகளில் பலியானவர்கள், சந்தேகத்துக்கு உரியவர்கள், விசாரணையில் இருப்போர் ஆகியோரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க இந்த அமிலம் பயன்படுகிறது.
இந்த டிஎன்ஏ தொழில்நுட்ப மசோதா கடந்த ஜூலை மாதம் மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றச்சூழல் மற்றும் வனம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் பரிந்துரைத்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்
இதுகுறித்து மக்களவைச் செயலாளர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், " மக்களவைத் தலைவருடன் , மாநிலங்களவைத் தலைவர் நடத்திய ஆலோசனைக்குப்பின், டிஎன்ஏ தொழில்நுட்ப மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக்குழு இந்த மசோதாவை ஆய்வு செய்து, மக்களிடம் கருத்துக் கேட்டு அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றச்சூழல் மற்றும் வனம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகக் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்ளார். அவர் இந்த மசோதா குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு குழுவில் ஆலோசனை நடத்தி, அறிக்கையாக அளிப்பார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதே மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை, இதனால், மக்களவையில் மசோதா காலாவதியானது குறிப்பிடத்தக்கது
பிடிஐ