

ரேவாரி, பிடிஐ
ஹரியாணா மாநிலம் ரேவாரி நகரில் உள்ள கல்லூரியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக திடீரென தரையிறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
ஹரியாணா மாநிலம் மகேந்திரகார்க் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார்.
தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி டெல்லி திரும்பினார். அப்போது, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தொடர்ந்து பறக்க இயலாத சூழல் இருந்தது. இதனால், ரேவாரி நகரில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் வேறுவழியின்றி விமானி ஹெலிகாப்டரை தரையிறக்கினார். திடீரென மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும், ஹெலிகாப்டர் தரையிறங்குவதைப் பார்த்து வியப்படைந்தனர். ஆனால், ஹெலிகாப்டரில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இறங்குவதைப் பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
ராகுல் காந்தியைப் பார்த்த மாணவர்கள் அவரிடம் கைகொடுத்து செல்பி எடுத்துக்கொண்டனர். மாணவர்களுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டே மைதானத்தை வலம் வந்த ராகுல் காந்தி அங்கிருந்த கிரிக்கெட் பயிற்சி மைதானத்துக்குள் சென்றார்.
அங்கு ஏறக்குறைய 20 நிமிடங்கள் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் காந்தி மகிழ்ந்தார். மாணவர்கள் ஒவ்வொருவராகப் பந்துவீச ராகுல் காந்தி பேட் செய்தார் பந்துகளைப் பறக்கவிட்டார். அதன்பின் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டபின் ராகுல் காந்தி சாலை மார்க்கமாக டெல்லி புறப்பட்டார்.
இதுகுறித்து ரேவாரி நகர போலீஸ் துணை ஆணையர் யாஷிந்திர சிங் கூறுகையில், " மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டர் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது. அங்கு மாணவர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, 20 நிமிடங்கள் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அதன்பின் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்" எனத் தெரிவித்தார்