

மேற்குவங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இடதுசாரி கட்சிகள் புதன்கிழமை வெளியிட்டன. இதில் 26 பேர் புதியவர்கள். 6 பேர் பெண்கள்.
இதில் அதிகபட்சமாக மார்க்சிஸ்டுக்கு 32 இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் அனைத்து இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு தலா 3 இடங்களும் ஒதுக்கப்பட் டுள்ளன.
இதுகுறித்து இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் கூறுகையில், "கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம்" என்றார்.
கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் அதன் பிறகு நடைபெற்ற சட்ட சபை, உள்ளாட்சித் தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் பின்னடைவை சந்தித்தன.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், இப்போது மக்களவை உறுப்பினர்களாக உள்ள 15 பேரில் 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப் படவில்லை.
26 புதுமுகங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சுபாஷினி அலியும் ஒருவர். இவர் சுதந்திரப் போராட்ட வீரர்களான பிரேம் செகல் மற்றும் லட்சுமி செகல் தம்பதியின் மகள் ஆவார். மேலும், 25 வயதான ஷேக் இப்ராஹிம் அலி (தம்லுக்) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.
குறிப்பாக கடந்த தேர்தலில் தோல்வி கண்ட தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக் கப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 6 தொகுதிகளுக்கும் புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் தாஸ்குப்தா வெற்றி பெற்ற கட்டல் மக்களவைத் தொகுதியில் இந்த முறை அக்கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் ராணா போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நடிகர் தேவ் போட்டியிடுகிறார். வயது முதிர்ச்சி காரணமாக குருதாஸ் தாஸ்குப்தா இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.