

என்.மகேஷ்குமார்
திருப்பதி
கல்கி ஆசிரமத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஆயிரக்கணக் கான அரசு மற்றும் தனியார் நில ஆக்கிரமிப்பு பத்திரங்கள் மீட்கப் பட்டதாக தெரியவந்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் விஜயகுமார் (70). எல்ஐசி.யில் ஊழியராக பணியாற்றி வந்த இவர் தன்னை தசாவதாரத்தில் 10-வது அவதாரமான கல்கி பகவான் அவதாரம் என கூறிக்கொண்டு, ஆந்திரா, தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்களை நிறுவினார். ஆந்திர மாநிலம் காள ஹஸ்தி அருகே வரதய்யபாளையம் பகுதியில் மட்டும் 26 ஏக்கர் பரப் பளவில் பிரம்மாண்டமான ஆசிரமம் கட்டப்பட்டது. ஆனால், இந்த ஆசிரம அறக்கட்டளையின் பதிவில் உள்ள பெயர் அடிக்கடி மாற்றப்படுவதாலும், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங் களை இதன் நிர்வாகிகள் ஆக்கிர மிப்பு செய்து அவற்றை ரியல் எஸ்டேட் தொழிலில் விற்று வரு வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால், தமிழகத்தை சேர்ந்த வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக கல்கி பகவான் ஆசிரமங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 3வது நாளாக நேற்றும் வரதய்யபாளையம் ஆசிர மத்தில் சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள நிர்வாகிகள் யாரையும் வெளியே அனுப்பவில்லை.அந்த சமயத்தில் ஆசிரம நிர் வாகிகள் ஒரு மூட்டையை ஆசிரமத் தின் பின்புறம் தூக்கி எறிந்ததை வருமான வரித்துறையினர் பார்த் துள்ளனர். உடனடியாக ஓடிச் சென்று அந்த மூட்டையை கைப் பற்றி செய்து சோதனையிட்டனர். அதில் ரூ.45 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர். மேலும், நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.33 கோடியில் 9 கோடி வெளிநாட்டு கரன்சிகள் என்பதும் தெரியவந் துள்ளது. மீதமுள்ள 24 கோடி இந்திய ரூபாய் நோட்டுகளாகும். இவை கட்டுக் கட்டாக ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அரசு மற்றும் தனி யாருக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பான பத்திரங் களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள னர். மேலும், ஆப்பிரிக்காவில் கோடிக்கணக்கில் நிலங்கள் ஆசிர மத்துக்கு சொந்தமாக இருப்பதும் அவையும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட நிலங்கள் என்பதும் தெரியவந் துள்ளது. இதற்கான பல கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ. 43.9 கோடி பணம் பறிமுதல்
இந்தியாவில் உள்ள கல்கி ஆசிரமங்களில் 40 இடங்களில் ஒரே சமயத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கோடி கோடியாக பணம், நிலப்பத்திரங்கள், தங்கம், வைரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய வருமான வரித்துறை ஆணையர் சுரபி அலுவாலியா நேற்று ஓர் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார். கடந்த 2014-15 வருவாய் ஆண்டு கணக்கின்படி ரூ. 409 கோடி காணிக்கை பணம் கணக்கில் காட்டவில்லை. இந்த ஆசிரம நிர்வாகிகள் ரூ. 500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
கடந்த 3 நாட்களில் ஆசிரமங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 43.9 கோடி இந்திய பணம், ரூ. 18 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், ரூ. 26 கோடி மதிப்புள்ள 88 கிலோ தங்கம், ரூ. 5 கோடி மதிப்புள்ள வைரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.