

புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ காவல் முடிந்த நிலையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள்.
சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், " இந்த தேசம் ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இல்லாத கொள்கையைப் பின்பற்றி வருகிறது. சிதம்பரத்துக்கு எதிராக மோசடி குற்றமும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
. இதுதொடர்பாக சிங்கப்பூர், மொரிஷியஸ் நாட்டுக்கு எல்ஆர் கடிதம் அனுப்பப்பட்டு பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
மேலும் சாட்சியங்களிடம் சிதம்பரம் போதுமான தொடர்பு கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
ஆதலால், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி முடிக்கும் வரை சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. நிதிமோசடி குற்றங்கள் செய்தவர்களை இப்போது இந்த தேசம் பார்த்து வருகிறது, அவர்களால் பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது ஆதலால், ஜாமீன் வழங்கக்கூடாது" எனத் தெரிவித்தார்
சிதம்பரம் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, துஷார் மேத்தாவின் குற்றச்சாட்டுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
சிங்வி வாதிடுகையில், " சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்தால் ஆதாரங்களை அழித்துவிடுவார், சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்ற குற்றச்சாட்டுப் பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது " தெரிவித்தார்.
மேலும், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையும் இன்று தாக்கல் செய்திருந்தது.
இந்தச்சூழலில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
பிடிஐ