Published : 18 Oct 2019 05:06 PM
Last Updated : 18 Oct 2019 05:06 PM

அயோத்தி வழக்கு: சார்பு இல்லாமல் செய்தி வெளியிட ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

புதுடெல்லி

அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில் இதுதொடர்பான செய்திகளை ஒளிபரப்பு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், எந்த ஒரு சார்பும் இல்லாமல் ஊடகங்கள் செயல்பட வேண்டும் என செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

அயோத்தி ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விரஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்குவது அவசியமாகும். இல்லாவிடில் ஒட்டுமொத்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

எனவே அக்டோபர் 18-ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு இடையே மத்தியஸ்த குழு மூலம் மனுதாரர்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்குத் தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதேசமயம் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவித்தனர்.

இந்த வழக்கில் அக்டோபர் 18-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டமிட்டிருந்த நிலையில் 2 நாள் முன்கூட்டியே அக்டோபர் 16-ம் தேதி விசாரணை நிறைவு செய்யப்பட்டது. அன்றைய தினமே மத்தியஸ்த குழுவும் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தது. இதனால் அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தநிலையில், செய்தி சேனல்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பான செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் 2 பக்க ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘அயோத்தி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதுதொடர்பாக ஊகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிடக்கூடாது. அயோத்தி வழக்கு தொடர்பான செய்தியை வெளியிடும்போது பாபர் மசூதி இடிப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட காட்சிகளை கோப்புக் காட்சிகளாக ஒளிபரப்பக் கூடாது.

இந்தச் செய்தியை ஒளிபரப்பும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அதுபோலவே கொண்டாட்டங்கள், எதிர்ப்புகள் என எந்தவிதமான காட்சிகளையும் பயன்படுத்த வேண்டாம். ஊடக தர்மத்துடனும், எந்த ஒரு சார்பும் இல்லாமல் செய்தியை சரியான முறையில் செய்தியாக மட்டுமே வெளியிட வேண்டும்.

யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ தோன்றும்படியான எண்ணத்தில் செய்தி ஒளிபரப்பும் விதம் இருக்க வேண்டாம். இதுதொடர்பான விவாதங்களில் கூட பொதுமக்களிடம் பற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வாதங்கள், தகவல்கள் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x