Published : 18 Oct 2019 04:35 PM
Last Updated : 18 Oct 2019 04:35 PM

நோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு உடையவர்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து

மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்.

புனே

பொருளாதாரத்திற்கான 2019 நோபல் பரிசை வென்ற அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி கம்யூனிச சித்தாந்தச் சார்புடையவர். அவருடைய சிந்தனையில் இடதுசாரிகளின் தாக்கம் முழுமையாக உள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் பணியாற்றிவரும் பானர்ஜி, இவருடைய மனைவியும் பொருளாதார ஆய்வாளருமான எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர் என்ற பொருளாதார நிபுணர் ஆகியோருடன் இணைந்து 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று முன்தினம், ''தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி பார்த்தால் நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு எந்தவிதத்திலும் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது என்றும் இந்திய பொருளாதாரம் ஆட்டங்கண்டுள்ளது'' என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ''அபிஜித் பானர்ஜி அறிக்கை குற்ற உணர்வை ஏற்படுத்தவில்லையா?'' என்று மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் மத்திய அரசு சார்பில் இதுவரை யாரும் அபிஜித் பானர்ஜி கூறிய கருத்தை மறுத்தோ ஆதரித்தோ கருத்து தெரிவிக்காத நிலையில் தற்போது மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அவரது கருத்துக்களுக்கு குறிப்பிட்ட வகையில் பதிலளிக்காமல், அவரது சிந்தனைகளை பொதுவாக விமர்சிப்பதுபோல ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வந்துள்ள அமைச்சர் இன்று புனேவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

''நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியை நான் வாழ்த்துகிறேன். அவர் கம்யூனிச சார்புடையவராக இருக்கிறார். அவரது சிந்தனை முற்றிலும் இடது சாய்வு கொண்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அபிஜித் பானர்ஜி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'நியாய்' என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தை ஆதரித்தவர் இந்திய மக்கள் அவரது சித்தாந்தத்தை நிராகரித்தனர்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x