ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம்,கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு எதிராக, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம், இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அனுமதி பெறுவதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உதவினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2017-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியோ முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தது. அதன்பின் நீதிமன்றக் காவலில் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக சிதம்பரம் திஹார் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப் பிரிவு சிதம்பரத்தைக் காவலில் எடுத்துள்ளது. அவரை விசாரிக்க 24-ம் தேதி வரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குகரிடம் தாக்கல் செய்தது.

இந்தக் குற்றப்பத்திரிகையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம், இந்திராணி முகர்ஜி, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் 4 பேர் உள்பட 14 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகாரிகளின் பெயரை வெளியிட சிபிஐ அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதில் இந்திராணி முகர்ஜி நீதிமன்ற அனுமதியுடன் அரசு சாட்சியாக மாறிவிட்டார். இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் முக்கியத் துருப்புச்சீட்டாக இருந்ததால்தான் சிபிஐ சிதம்பரத்தைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in